உத்தரப் பிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிருத் ராய். முதியவரான இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று அனிருத் ராய் ஒரு மருத்துவமனை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அனிருத் ராய்யை கடுமையாக தாக்கினர். இதில் தடுமாறி கீழே அனிருத் ராய் கீழே விழுந்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் தாக்கினர். இதனை கண்ட ஒரு பெண் மட்டும் அந்த கும்பலைத் தடுக்க முயன்றார். ஆனால் அதையும் மீறு அனிருத் ராயின் முகத்திலே கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, அனிருத் ராய்யை மீட்டு வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் சந்தேகித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அனிருத் ராய்யை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருந்த போது, அங்கு போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்பட பொதுமக்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரிகள் முன்பே நடந்த இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.