நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிரான வகையில், முந்தைய சட்ட நிலையே தொடரும் வகையில் நாடாளுமன்றத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவை இன்று விசாரித்த நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வு, 'எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை தடை செய்ய முடியாது என கூறியது. மேலும் இது தொடர்பான அனைத்து மனுக்களும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என அறிவித்துள்ளனர்.