Skip to main content

விருதை திருப்பி தந்த வினேஷ் போகத்! மோடியை சாடிய ராகுல் 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Vinesh Phogat returned the award! Rahul condemn Modi

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைக்கக் கோரி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.12.2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன் படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளிக்க பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று சென்றார். ஆனால், அவர் வழியிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டார். இதனால் அவர், தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார். பிறகு அதனை டெல்லி போலீஸார் எடுத்து சென்றனர். 

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதையே முதன்மையானது. பிறகு தான் பதக்கங்களும் மற்ற பெருமைகளும். இந்தத் துணிச்சலான வீராங்கனைகளின் கண்ணீரைவிட உங்களது பாகுபலியால் கிடைக்கும் அரசியல் பலன்கள் முக்கியமானதா? பிரதமர் தான் இந்தியாவின் காப்பாளர். ஆனால், இத்தகைய கொடுமையில் அவருக்கும் பங்கிருப்பது வேதனை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்