Skip to main content

"தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் பாதுகாக்காது"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

"Nothing protects except the vaccine" - Prime Minister Narendra Modi's speech!

 

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் இன்று (13/01/2022) மாலை 04.45 மணிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசிப் போடும் பணிகளை விரைவுபடுத்துவது, முன்களப் பணியாளர்கள்,  60 - வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்துவது, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். 

 

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் நம்மை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்காது. மாநிலங்களிடம் போதிய கரோனா தடுப்பூசி டோஸ் கையிருப்பில் உள்ளது. முந்தைய கரோனா தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம்; நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். 

 

வீடுகளில் தனிமைப்படுத்தி சிறப்பான சிகிச்சையளித்தால் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்க்கலாம். தடுப்பூசித் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது; கரோனா பரவலும் அதிகரித்துள்ளது; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்டிகை காலத்தில் கரோனா அதிகரிப்பதைத் தடுக்க மாநில முதலமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 

 

இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் மனசுக் மாண்டவியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்துக் கொண்டனர். அதேபோல், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்