மதுரை அனஞ்சியூரை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் ஷியாம் (20). மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து அவருடன் படித்து வரும் சக நண்பர்களான சுபாஷ் (20), யோகேஷ் (20) ஆகியோருடன் நேற்று முன் தினம் (24.12.2019) இரவு மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு ஷியாம் புறப்பட்டார். நேற்று (25.12.2019) அதிகாலை புதுச்சேரி வந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.
பின்னர் பகல் 02.00 மணி அளவில் 3 பேரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா வந்த பயணிகள் வேறு சிலரும் அந்த பகுதி கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
அந்த நிலையில் திடீரென எழுந்த ராட்சத அலை மாணவர்கள் 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கி தத்தளித்த அவர்கள் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. மேலும் கடற்கரையில் பயணிகள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் (லைப் கார்ட்ஸ்) 2 பேர் உடனடியாக கடலுக்குள் குதித்து அலையில் சிக்கி தத்தளித்த 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஷியாம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற இரு மாணவர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.