இந்தியாவில் கடந்தாண்டு பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட இரண்டு கரோனா அலைகளிலும் சேர்த்து 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தநிலையில் தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளது.
இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா சுவாமிநாதன், இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இன்னும் சில காலத்திற்கு, மக்கள் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பை தளர்த்திக்கொள்வதற்கு இது நேரமல்ல. இன்னும் ஆறு மாத காலத்திற்கோ அல்லது அதற்கு மேலோ எச்சரிக்கையாக இருப்போம். அதற்குள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டால், நிலைமை மேம்படும்" என கூறியுள்ளார்.