நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அதே வேளையில், நாடாளுமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு இரு அவைகளிலும் மறுப்பு தெரிவிப்பதால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பானி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த ஜோல்னா பையை தூக்கி விநோத போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று (16-12-24) பிரியங்கா காந்தி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஜோல்னா பை ஒன்றை கையில் ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களான இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று (17-12-24) நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தி, ஜோல்னா பையை கொண்டு வந்தார். அந்த பையில், ‘வங்காளதேசத்தின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்’ என எழுதப்பட்டிருந்தது. மேலும், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இது குறித்துப் பேசிய பிரியங்கா காந்தி, “வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களான இந்து மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு அரசு குரல் கொடுக்க வேண்டும். வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வலியில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். வயநாடு தொகுதியின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரியங்கா காந்தி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.