Skip to main content

திமுக எம்.பி., டி.ஆர். பாலுவின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு!

Published on 17/12/2024 | Edited on 17/12/2024
central govt accepted DMK MP tR Baalu  request 

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம் ஆகும். அந்த திட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது.

இந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. அதன்மூலம் 18 ஆயிரத்து 626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12ஆம் தேதி (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

அதே சமயம் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துப் பேசி வருகின்றனர். அந்த வகையில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. தர்மேந்திரா யாதவ் பேசுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பு அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கச் சதி நடக்கிறது” எனப் பேசினார். அதே போன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.

central govt accepted DMK MP tR Baalu  request 

மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில், “நான், 129வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை எதிர்க்கிறேன். இது கூட்டாட்சிக்கு எதிரானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. அதை ஒரே நேரத்தில் தேர்தல் மூலம் குறைக்க முடியாது. எனவே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்ப மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “திமுக எம்.பி., டி.ஆர். பாலுவின் கோரிக்கையை ஏற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டுக் குழு பரிசீலமையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாகக் கருத்து கூறலாம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவைக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக தற்போது மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 220 உறுப்பினர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழு விசாரனைக்கு அனுப்ப ஆதரவு தெரிவித்து  வாக்களித்தனர். மேலும் 149 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். 

சார்ந்த செய்திகள்