சீனா, பாகிஸ்தானின் நிலம் இந்தியாவுக்குத் தேவையில்லை எனவும், அமைதி மட்டுமே தேவை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்துப் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதைக் கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் ஜன் சம்வாத் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் காணொளிக்காட்சி மூலமாகப் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, "நாட்டில் தலைதூக்கி வந்த மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் பிரச்சனையைத் தீர்த்து உள்நாட்டுப் பாதுகாப்பை மோடி அரசு வலுப்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத செயல்களையும் நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். நமது எல்லையில் ஒருபுறம் சீனா, பாகிஸ்தான் தொல்லை இருந்தாலும், நமக்குத் தேவை அமைதியும், வன்முறையில்லாத சூழலும்தான்.
இந்தியா எப்போதும் தனது எல்லையை விரிவுபடுத்தி தன்னை வலிமையான நாடாகக் காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை. சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றின் ஒரு அங்குல நிலத்தைக்கூட இந்தியா விரும்பியதில்லை. வங்கதேசப் போரின்போதுகூட, போரில் வென்றபின், அந்நாட்டின் பிரதமராக முஜிபுர் ரஹ்மானை அமரவைத்தோமே தவிர, அந்நாட்டினை கைப்பற்றவில்லை. அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் ஒரு அங்குல நிலம்கூட நமக்கு வேண்டாம். நமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு, பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுதல்தான்" எனத் தெரிவித்துள்ளார்.