நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது. நாளைக்கு கண்டிப்பாக அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத்தண்டனையை இன்று நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று காலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பவன் குப்தாவின் வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குற்றவாளிக்கு தெரியப்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் 14 நாட்களுக்கு தூக்கிலிட முடியாது. இதன் காரணமாக டெல்லி நீதிமன்றம் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.