ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாகவும், மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் இன்று காலை மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.
அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்தார். அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, "காஷ்மீர் விவகாரத்தில் தேசிய ஒருங்கிணைப்புக்கான வலிமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.