ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர், முதல்வர்கள் எனப் பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் முர்மு, “ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளைப் பரப்புகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, “நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், “மனித நேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன். நமது திராவிட மாடல் அரசும், நபிகள் பெருமகனார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றி தனது பயணத்தை தொடர்கிறது; என்றென்றும் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.