பணமோசடி தடுப்பு சட்ட (PMLA) வழக்கில் மும்பையைச் சேர்ந்த ஆர்.கே. இஸ்ரானி என்ற முதியவர் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை நடத்தியிருந்தனர். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதியவரைத் தூங்கவிடாமல் நள்ளிரவு வரை விசாரணை நடத்தியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. அதோடு, ‘தூக்கம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அதனை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்படக் கூடாது’ எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த உத்தரவில், “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்களின் வாக்குமூலத்தைப் பகலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஒருவரைச் சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு முன் குறிப்பிட்ட நாளில் தேவையான ஆவணங்களைத் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சம்மனில் குறிப்பிடப்படும் தேதி மற்றும் நேரத்தில் ஆஜராகும் நபர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்திருக்கக் கூடாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை ஓரிரு நாட்களில் முடித்துக் கொள்ள வேண்டும்.
முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை நீட்டிக்கக் கூட்டாது. முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களிடம் குறிப்பிட்ட நாளில் விசாரணையை முடிக்காவிட்டால் இருதரப்பும் ஒத்துக்கொள்ளும் நாளில் விசாரணை நடத்தப்பட வேண்டும். வழக்கமான நேரத்தைத் தாண்டி விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் உயரதிகாரிகளின் அனுமதியைப் பெறுவது அவசியம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.