உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் பகுதியிலுள்ள மசாலா தொழிற்சாலையில் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்த மசாலாப் பொருட்களில் கலப்படம் செய்திருந்தது அம்பலமானது.
என்னதான் இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் இருந்தாலும், சட்டத்தின் கண்களை ஏமாற்றி உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
குறிப்பிட்ட மசாலா தொழிற்சாலையில் கலப்படம் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் அந்த தொழிற்சாலையைச் சோதனையிட்டனர். அப்போது 300 கிலோ கிராம் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் போன்ற கலப்பட மசாலாப் பொருட்கள் பிடிபட்டன.
இந்த மசாலாப் பொருட்களில் தூள் செய்யப்பட்ட கழுதைச் சாணம், வைக்கோல் தூள், தடை செய்யப்பட்ட நிறமிகள், அமிலங்களின் சேர்க்கைகள் காணப்பட்டதாக காவலர்கள் கண்டறிந்தனர்.
இந்தத் தொழிற்சாலையை நடத்திவந்த அனூப் வர்ஷ்னே, ஹிந்து யுவ வாகினி அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர் ஆவார். உத்தரப்பிரதேசத்தில் ஹிந்து யுவ வாகினி அமைப்பு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் அமைக்கப்பட்டதாகும். மேலும், தொழிற்சாலையை நடத்தவோ, அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மசாலாவைத் தயாரிக்கவோ அவர் உரிமம் பெற்றிருக்கவில்லை.
இதையடுத்து அனூப் வர்ஷ்னே உணவுப்பொருள் கலப்பட தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.