இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருந்த போதிலும் கரோனாவின் தாக்கம் இந்தியாவில் குறையவில்லை. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,000 கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று அறிவித்திருந்தார்.
தற்போது, உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் 3 மாதங்களுக்கு உள்நாட்டு விமான கட்டணங்களை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லியில் இருந்து மும்பை செல்ல சராசரி கட்டணம் ரூ.6,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் மிகவும் அதிகரிக்க கூடாது என்பதால் இவ்வாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆரோக்கிய சேது ஆப்பில் பயணிகள் நிலை சிவப்பாக காட்டினால் அவர் விமானத்தில் பயணிக்க முடியாது. பல்வேறு நாடுகளில் சிக்கிய 20 ஆயிரம் இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம் என தெரிவித்தார்.