கேரள விமான விபத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்தக் கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் இந்த விமானத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த, சம்பவ இடத்திற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு உடனே செல்ல உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.