மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் 23ஆம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொடுத்த வாக்குறுதி தற்போது பேசுபொருளாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜாசாகேப் தேஷ்முக் என்பவர் போட்டியிடுகிறார். இவர், சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நான் எம்.எல்.ஏ.வானால் திருமணமாகாத அனைத்து இளைஞர்களுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம். மணப்பெண்ணைத் தேடும் ஒரு இளைஞர்களிடம், வேலை அல்லது தொழில் இருக்கிறதா என்று மக்கள் கேட்கிறார்கள். மாவட்ட காவல் துறை அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கே எந்த வேலையும் இல்லாதபோது, நீங்கள் என்ன பெறப் போகிறீர்கள்?
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ தனஞ்சய் முண்டே, இந்த தொகுதிக்கு ஒரு தொழிலையும் கொண்டு வரவில்லை. எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல், திருமணம் செய்துகொள்ள கஷ்டப்படுகிறார்கள்” என்று கூறினார்.