நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் சுங்கச் சாவடிகள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்தும், சாலை கட்டணம் வசூலிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 2,21,585.46 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில் ரூ. 2,27,963.25 கோடி சாலை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் ரூ. 17,759.12 கோடியாக இருந்த சாலை சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன்படி, 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ. 18,511.69 கோடி வசூலாகியுள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 22,664.50 கோடி வசூலாகியுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 25,145.19 கோடி வசூலாகியுள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 33, 907.71 கோடியாக இருந்த சுங்கக் கட்டண வசூல் தொகை 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ. 48,028. 19 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கடந்த 8 மாதங்களில் நாடு முழுவதும் வசூலான மொத்த சுங்கக் கட்டணத் தொகை ரூ. 36,377.79 கோடியாகும்.
அதேபோன்று தமிழகத்தில் உள்ள 65 சுங்கச் சாவடிகளிலும் தொடர்ந்து சுங்கக் கட்டண வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 2,332. 78 கோடியாக இருந்த சுங்கக் கட்டணம் வசூல் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 2,695.77 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் ரூ. 3, 817.48 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2020- 21 முதல் 2022-23 வரையிலான 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் ரூ.8,846 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.