அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதானிக்கு எதிராக வைக்கப்பட்ட லஞ்சப் புகார் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் விலை சரிவைச் சந்துத்துள்ளன. அந்த வகையில் அதானி எண்டர் பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பங்குகள் விலை 10 சதவீதம் சரிந்துள்ளன. அதானி துறைமுக (போர்ட்) பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதே போன்று அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 சதவீதத்துக்கும் மேல் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளன. இதனால், மொத்தம் ரூ.2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழமம் இழந்துள்ளது.
இந்த நிலையில், அதானி பங்குகளில் முதலீடு செய்த இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 7 அதானி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த எல்.ஐ.சிக்கு, ரூ.11,728 அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.