மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அரசியல் உலகில் எதிரெதிர் துருவங்களாக திகழ்ந்த முலாயம் யாதவும், மாயாவதியும் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். கடந்த 1995 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தொண்டர்களால் மாயாவதி மோசமாக தாக்கப்பட்டார். அது முதல் இவ்விரு கட்சியும் எதிர் துருவங்களாகவே இருந்து வந்தன.
இதனை தொடர்ந்து முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவிடம் கட்சி வந்த பிறகு தற்போதைய மக்களவை தேர்தலுக்காக பாஜக வை எதிர்த்து இவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை ஆதரித்து இன்று மாயாவதி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது முலாயம் சிங் மற்றும் மாயாவதி இருவரும் இணைந்து தொண்டர்கள் மத்தியில் பேசினர்.