இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால், தடுப்பூசி குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டாக்டர் வி.கே பால் கூறுகையில், "ஜான்சன்&ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசி தொடர்பாக அந்தநிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திட்டத்தின்படி ஹைதராபாத்தில் உள்ள பயோ-இ நிறுவனத்திலும் அந்த தடுப்பூசியை தயாரிக்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேரிடம் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் வி.கே பால்தெரிவித்தார். மேலும் அவரிடம் உலகின் முதல் டி.என்.ஏ கரோனா தடுப்பூசியான சைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சைடஸ் காடிலாவின் விண்ணப்பம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் உள்ளது. அது நிபுணர் குழுவின் மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது. நேர்மறையான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். (டி.என்.ஏ தடுப்பூசி) ஒரு தனித்துவமான தொழில்நுட்பம் என்பதால் அது (ஒப்புதல் பெறுவது) பெருமைக்குரிய தருணமாக இருக்கும். அது நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதலை அளிக்கும்" என தெரிவித்தார்.