அசாம் மாநிலம் ஜோர்காட் நகரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து ஏஎன்- 32 விமானம் ஜூன் 3-ஆம் தேதி மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் எட்டு விமானிகள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்திற்கு பகல் 01.00 மணியளவில் சென்ற போது விமானம் திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப்படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணியில் ராணுவம், விமானப்படை ஈடுபட்டது. ஆனால் விமானம் குறித்து எந்த ஒரு தகவலும் இது வரை கிடைக்கவில்லை.
விமானம் மாயமாகி 125 மணி நேரங்களை கடந்தும் மாயமான விமானம் குறித்து தேடுதல் பணியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையில் உள்ள செயற்கைகோள் மற்றும் ரேடார் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி விமானம் தேடப்பட்டு வருவதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீன எல்லை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இதற்கான தேடுதல் பணிகள் தீவிரமாகி நடைபெற்று வருகிறது. தேடுதல் பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், ராணுவம் என அனைவரும் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.