ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்த மாநாட்டை நடத்துவதற்கு மத்திய அரசு சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் பரவலாக குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமாக ஜி20 மாநாடு நடைபெறும் இடங்களிலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவற்றின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதற்கிடையே, இந்த ஜி-20 மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தர உள்ளனர். எனவே, மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாடு நடைபெறும் இடங்களில் குரங்குகளால் எந்தவித தொல்லையும் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் எடுத்து வருகின்றனர்.
அதில், நீண்ட வாலும், கருமையான முகமும் கொண்ட ஆக்ரோஷ குணம் படைத்த லங்கூர் வகை குரங்குகளைக் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில், இந்த லங்கூர் வகை குரங்குகளின் பெரிய அளவிலான கட் அவுட்டுகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த குரங்குகளைப் போல் ஒலிகளை எழுப்பும் பயிற்சி பெற்ற நிபுணர்களை மாநாடு நடைபெறும் இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்ற வகையான குரங்குகள், லங்கூர் வகையான குரங்குகளைக் கண்டு பயப்படுவதால் இந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால், ஜி-20 நிகழ்வுகளின் போது மற்ற குரங்குகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், லங்கூர் குரங்குகளைக் கொண்டு பிற குரங்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.