மக்களவை தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி பேசும் முதல் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் நாடு முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இது குறித்து பேசிய அவர், "கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ‘மன் கீ பாத்’ தொடரின் கடைசி பகுதியில் நான் பேசும்போது, நாம் 3 அல்லது 4 மாதங்களில் மீண்டும் சந்திப்போம் என கூறினேன். அது வெறும் மோடியின் நம்பிக்கை மட்டுமல்ல, மாறாக மக்களாகிய உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நான் கூறியது. அது தற்போது உண்மையாகியுள்ளது. நீங்கள்தான் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கிறீர்கள்.
தற்போதைய நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. நீர் நிலைகள் வற்றிப்போய், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. எனவே நாம் மழைநீரை சேமிக்க வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பிரபலங்கள் முன்வர வேண்டும்.
ஒவ்வொரு துளி நீரும் சேமிக்கப்பட வேண்டும். அது போல நீர் மேலாண்மையும் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இப்போது கூட தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் ஓடும் நாக நதியை அந்த கிராம மக்களே சேர்ந்து தூய்மைப்படுத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் இதற்காக ஒன்றிணைந்து உழைத்தனர். இதில் பெண்களின் பங்களிப்பும் அதிகம் இருந்ததை நான் கவனித்தேன். அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குரியது. இது நீர் மேலாண்மைக்கு சிறந்த உதாரணம் ஆகும்’ என்று குறிப்பிட்டார்.