
மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தனக்கு தந்தை போன்றவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 92 வயதான இவர் குஜராத் மாநிலத்தின் துணை முதல்வராகவும், முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே, உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கேசுபாய் படேல் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் நேற்று திடீரென கேசுபாய் படேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 11.51 மணிக்கு உயிரிழந்தார். இந்நிலையில், கேசுபாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கேசுபாய் மறைந்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் எனக்கு ஒரு தந்தை போன்றவராக இருந்தார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" எனத் தெரிவித்துள்ளார்.