மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்த வகையில் மராட்டியத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள். என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு இனத்தையே களங்கப்படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் என்பதால் வாரிசு அரசியல் செய்பவர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் அவர்கள் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது" என கூறியுள்ளார்.