மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்த பின்னர், அக்கட்சியின் முதல் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் 5 ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக எம்.பி மதன்லால் சைனி மரணமடைந்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடந்த இந்த கூட்டத்தில் பாஜக வின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்.பி க்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் வெற்றிக்காக உழைத்த அமித் ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் பேசிய மோடி, "பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். பாஜக நிர்வாகிகள் எந்த சூழலிலும் தங்கள் மோசமான நடத்தை மூலம் கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தவே கூடாது" என தெரிவித்தார். சமீபத்தில் ஒருசில பாஜக எம்.பிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சில சர்ச்சைகளில் சிக்கி பிரச்சனை ஆன நிலையில், மோடி இவ்வாறு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.