
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்த, மன்னிப்பு கோரியும் விடாமல் அவரை தொடர்ந்து வருகிறது வழக்கு. இதில் ஒரு மாத சிறை தண்டனையுடன் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும் தற்போது வரை மேல்முறையீட்டு வழக்காக உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.
நாரத கான சபா சார்பில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் எம்எல்ஏ வேடத்தில் எஸ்.வி.சேகர் நடித்துள்ளார். அதில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருக்கும் எஸ்.வி.சேகரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்புவது போல காட்சி இருந்தது. அதில் பெண் பத்திரிகையாளரிடம் தன் மடியை காட்டி அமர செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அதேபோல் ''எம்எல்ஏ சொல்லும் பதிலைக் கேட்டு எனக்கு தலையே சுற்றுகிறது'' என பெண் பத்திரிகையாளர் சொல்ல, ''உங்க தலைச்சுற்றலுக்கு நான் காரணம் அல்ல'' என இரட்டை அர்த்தத்தில் எஸ்.வி.சேகர் பேசுவது போன்ற காட்சியும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் மன்னிப்பு கேட்டும் விடாமல் சிக்கி தவிக்கும் நிலையில் திருந்தாமல் மீண்டும் எஸ்.வி.சேகர் இப்படி செய்துள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.