கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பயன்தரும் வகையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
![modi appreciates the new announcements by rbi governor](http://image.nakkheeran.in/cdn/farfuture/6rNgKbERwd6s06-FY2du4FHLqtzmATqGs7qu1wzfzus/1585294347/sites/default/files/inline-images/fdxdfgdf.jpg)
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 700 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது. இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ரெப்போ விகிதம் குறைப்பு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணை வசூலிக்க தடை உள்ளிட்ட பல அறிவிப்புகளை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இன்று ரிசர்வ் வங்கி கரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும், நிதி செலவைக் குறைக்கும், நடுத்தர வர்க்கம் மற்றும் வணிகர்களுக்கு உதவும்" என தெரிவித்துள்ளார்.