பிரதமர் மோடி தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் முதல்வர் மற்றும் பிரதமர் பதவிகளை வகித்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று குஜராத் முதல்வராகப் பதவிவகித்தார். அதன்பின் 2014 மக்களவை தேர்தலின்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு, நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வென்று பிரதமராக மோடி தொடர்ந்து இருந்து வருகிறார்.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் தலைவராக எவ்விதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "இன்று நரேந்திர மோடி முதல்வராகவும் பிரதமராகவும் 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவர் குஜராத்தின் முதல்வரானபோது, மத்தியில் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தது. நீண்ட காலமாக, தனி ஒரு கட்சி ஆட்சிக்கு வரவில்லை. அதன்பிறகும் 10 வருடங்கள் கூட்டணி அரசே ஆட்சியிலிருந்தது.
இதன் காரணமாக ஊழல், பாதுகாப்பில் சமரசம், முதுகெலும்பு இல்லாத வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், ஏழைகளை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பார்கக்கூடிய ஆட்சி நடந்தது. இது மக்களிடையே ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது
அப்போது மோடிக்குக் கட்சி ஒரு வாய்ப்பு வழங்கியபோது, இந்த தேச மக்கள் அவருடன் நின்றனர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சிக்கு முழுமையான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் முறையாகக் காங்கிரஸ் அல்லாத தலைவர் இந்த நாட்டின் பிரதமர் ஆனார்" எனத் தெரிவித்துள்ளார்.