![Minister Nirmala speech for white paper](http://image.nakkheeran.in/cdn/farfuture/DKDIE20M9H832_GfixtnTHzkDk9ILTfnp87W7bnODr8/1707464049/sites/default/files/inline-images/central-vista-art_4.jpg)
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். அதில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுக்கால முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கீழ் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன. 2008ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உட்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விட்டுச் சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
![Minister Nirmala speech for white paper](http://image.nakkheeran.in/cdn/farfuture/VSUFv1lp3MVNKM7emLLC5AEjv_gvOtY9XOX5Ys-h4GY/1707464126/sites/default/files/inline-images/nirmala-white-art_0.jpg)
இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கடும் சவால்கள், சிக்கல்களுக்கு இடையே இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை சரிசெய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. இருப்பினும் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு திறம்படக் கையாண்டது. பொருளாரதாரத்தில் முதல் 5 இடங்களை எட்டியபிறகு வெள்ளை அறிக்கை தரப்பட்டுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை காங்கிரஸ் சீர்குலையச் செய்தது. எல்லாவற்றையும் செய்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டின் உலக பேரிடரை எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி, பேரிடரை எதிர்கொள்வது பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறது. நான் யாரையும் வசை பாடவில்லை. உண்மையை மட்டுமே கூறுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலை உலகம் அறியும். காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக சலுகைகளை வழங்கியது” எனப் பேசினார். நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.