Skip to main content

“எதிர்க்கட்சிகள் ஒன்று சேரலாம்... இணைந்திருக்க முடியாது” - பிரதமர் மோடி

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

"Opposition parties can together.. but not join together" - PM Modi

 

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தக் கூட்டணி உருவாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாஜ்பாய், அத்வானியால் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. நம் நாட்டில் கூட்டணி அமைப்பது என்பது பாரம்பரியமானது. ஆனால், எதிர்மறையான நோக்கத்துடன் உருவாக்கப்படும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை. கடந்த 1990ம் ஆண்டு நாட்டை ஸ்தம்பிக்க வைக்கவும், அரசுகளை உருவாக்கவும், கவிழ்ப்பதற்காகவும் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோல்வி அடைந்தது. அதேசமயம், 2014க்கு முன் அமைக்கப்பட்ட கூட்டணி அரசு முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்திருந்தாலும், கொள்கைகளும், அரசு நிர்வாகமும் முடங்கியிருந்தன. பிரதமருக்கு மேல் ஓர் அதிகார மையம் இருந்தது. 

 

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது கட்டாயத்தால் உருவான கூட்டணி கிடையாது. பங்களிப்பை உணர்த்தும் கூட்டணி. கூட்டணியின் சிறந்த பங்களிப்பால் இதில் உள்ள அனைவருக்கும் பெருமை உண்டு. இங்கு சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என பேதம் கிடையாது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றது. 

 

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், நேர்மறையான அரசியலிலேயே இந்தக் கூட்டணி செயல்பட்டுவந்துள்ளது. எந்த நேரத்திலும், வெளிநாடுகளின் உதவியை கேட்டதில்லை. இந்தக் கூட்டணி, மற்ற எல்லாவற்றையும் விட நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும். 

 

எந்தக் கட்சிக்கும் எதிராக இந்தக் கூட்டணி உருவாக்கப்படவில்லை. மாறாக நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் போதித்த சமூகநீதி பாதையில் இந்தக் கூட்டணி பயணித்துவருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னை அர்ப்பணித்துள்ளது. நமது கூட்டணி மக்களை ஒற்றுமைப்படுத்துகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணி பிளவை ஏற்படுத்துகிறது. 

 

கடந்த 2014ம் ஆண்டு வரை அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த தரகர்களை தூக்கி எறிந்துள்ளோம். அரசியலில் போட்டிகள் இருக்கலாம், பகைமை இருக்கக் கூடாது. ஆனால், எதிர்க்கட்சிகள் நமக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், நம்மை வீழ்த்த நினைக்கின்றன. 

 

எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தபோதும், பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதையும், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்கியும் இந்தக் கூட்டணி அரசு அழகு பார்த்தது. சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கலாம். ஆனால், இணைந்திருக்க முடியாது. மக்களின் அறிவுத்திறன் குறித்து எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன. எதற்காக இந்தக் கட்சிகள் தற்போது கூட்டணி அமைத்துள்ளன என்பது குறித்து மக்களுக்குத் தெரியும். 

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூன்றாவது முறையும் ஆட்சியில் அமரவைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். கடந்த 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணி 38% வாக்குகளையும், 2019ல் 45% வாக்குகளையும் பெற்றது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவோம்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்