கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜ்ஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.
அதே வேளையில், கல்லூரி மாணவி நேகா கொலை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவின் கருத்து சர்ச்சையானது. இது தொடர்பாக பேசிய பரமேஷ்வரா, “ நேஹாவும் குற்றம் சாட்டப்பட்ட பயாஜும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், நேஹா அவரிடமிருந்து விலகி இருக்க முயன்றுள்ளார். மேலும், பயாஜ்ஜை திருமணம் செய்ய நேகா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி நேஹாவை கொன்றுள்ளார். இது லவ் ஜிஹாத் வழக்கு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார். இவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது கருத்து நேகாவின் பெற்றோரை பாதித்திருந்தால், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.