தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் மீது பதில்த்தாக்குதல் நடத்தவே, அங்கு வன்முறை வெடித்தது. அப்போது, காவல்துறையினர் பொதுமக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 65க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.