Skip to main content

மணிப்பூர் வீடியோ விவகாரம்; 4 பேர் கைது

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

manipur video incident 4 person issue 

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான ஹேராதாஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மணிப்பூர் கலவரத்தில் ஈடுபட்ட 657 பேரை இதுவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக 129 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக நேற்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. இரு அவைகளிலும் உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து இன்று காலை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Om Birla re-elected as Lok Sabha Speaker

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு கடந்த இரு தினங்களாக தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். மேலும் ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் தீர்மானத்தை வழிமொழிந்தனர். இதனையடுத்து 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுயும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.

அதே சமயம் இடைக்கால சபாநாயகரின் கடமைகளை நிறைவேற்றியதற்காக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப்க்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார். சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில், “மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே, நீங்கள் இரண்டாவது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது பேரவையின் அதிர்ஷ்டம். உங்களுக்கும் ஒட்டுமொத்த சபைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MP sworn in Telugu

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர். 

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.