
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் அருகே நீட் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத அனுமதித்ததாக புகார்கள் எழுந்தது. இது குறித்து மாணவி ஒருவரின் தந்தை புகார் தெரிவித்திருந்த நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டறியக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொல்லம் சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். நீட் தேர்வு மையமாக செயல்பட்ட கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த இருவர் மற்றும் தேர்வின் பொழுது உதவும் பணியிலிருந்த தனியார் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் ஐந்து பேரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இது தொடர்பாக கேரளாவின் கொல்லம் பகுதியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்த கல்வி மையத்தின் முன் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி நிலையத்தின் ஜன்னல்கள் போன்ற உடைமைகளை உடைத்து நொறுக்கினார். அதன்பிறகு அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.