கரோனா வைரஸ் குறித்து மக்களவையில், பல்வேறு விசயங்களை முன்னிறுத்தி தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார் மக்களவையின் திமுக துணைத்தலைவர் கனிமொழி எம்பி. அவருடையை பேச்சுக்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில், கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் , அவர்களுக்கு அரசு முன்னுரிமை தந்து உதவ வேண்டும் என்றும் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார் கனிமொழி.
மக்களவையில் இன்று (20-ஆம் தேதி) அவர் பேசுகையில், "கரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சம் ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் , சமுதாயத் தொற்று ஏற்படாவண்ணம் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம்.
அதேநேரம் , சில நிறுவனங்கள், ஆலைகள் மட்டுமே தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி அளித்து இருக்கின்றன. இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் சுமார் 81% தொழிலாளர்கள் அமைப்பு சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள், உணவக தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆகியோரின் வருமானம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிதும் குறையவோ அல்லது ஒன்றும் இல்லாமல் போகவோ வாய்ப்புள்ளது.
நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் கூட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் தடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
நான் இந்த அரசை வேண்டிக் கொள்வதும் வலியுறுத்துவதும் என்னவென்றால் இந்தக் குழுவின் முதன்மையான முக்கியமான கவனம் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மீது இருக்க வேண்டும் என்பதுதான். அமைப்பு சாராத் தொழிலாளர்களின், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார் கனிமொழி.