மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபைசல். இவர், காலிஸ்தான் பிரிவினைக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக கூச்சலிட்டு இந்தியாவை அவமதித்து பேசியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, மத்தியப் பிரதேச காவல்துறையினர் ஃபைசல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஃபைசலுக்கு வித்தியாசமான நிபந்தனையை விதித்து பிணை வழங்கி உத்தரவிட்டது. அதில், இந்தியாவின் தேசியக் கொடியை பார்த்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டபடியே 21 முறை சல்யூட் அடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணை வழங்கியது. மேலும், பிணையில் உள்ள காலத்தில் முதல் மற்றும் கடைசி செவ்வாய் கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி இந்த நிபந்தனையை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று (செவ்வாய் கிழமை) அன்று காவல்நிலையம் வந்த ஃபைசல், நீதிமன்ற நிபந்தனையின்படி, தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து 21 முறை ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டார்.
இதனை கண்ட பத்திரிகையாளர்கள், ஃபைசலிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “நான் ஒரு தவறு செய்துவிட்டேன், நான் அதை உணர்ந்துவிட்டேன். நான் ஒரு இந்தியன், தேசியக் கொடியை மதித்து பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிடுவேன். தேச விரோத கோஷங்களை எழுப்பவோ, தேசியக் கொடியை அவமதிக்கவோ வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இனி என் வாழ்நாளில் இந்த தவறை செய்ய மாட்டேன்” என்று கூறினார்.