
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
சர்வதேச அளவிலும் விவசாயிகள் போராட்டம் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய நிலையில் பிரதமரின் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.