
புதுச்சேரி செயிண்ட் தெரேஸ் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இளைஞர்கள் கார்த்திகேயனின் இரு சக்கர வாகனத்தை மற்றொரு இரு சக்கர வாகனத்தைக் கொண்டு காலால் தள்ளி செல்வது பதிவாகி இருந்தது,
மேலும், கேமராவில் பதிவான இருவரும் நகர பகுதிகளில், மேலும் சில இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவின் பேரில் புதுச்சேரி கிழக்கு பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்,
இந்நிலையில் சர்தர் வல்லபாய் பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை அருகே பெரியகடை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டவர்கள் இவர்கள் தான் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இவர்கள் சிதம்பரத்தைச் சேர்ந்த விஜய் (வயது 18), மற்றும் பாலகணபதி (வயது 19) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி நகர பகுதிகளான நெல்லித்தோப்பு, வினோபா நகர் உள்ளிட்ட இடங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிதம்பரத்தில் பதுக்கி வைத்திருந்த மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவர்களை சிறையில் அடைத்தனர்.