டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு கடந்த 7 ஆம் தேதி (07.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. அதே சமயம் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவாலை விடுவித்தால் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளக் கூடாது. பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்பதால் அவருக்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (10.05.2024) விசாராணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளித்தும், முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போதைய தேர்தல் சூழலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.