Skip to main content

உ.பி பஞ்சாயத்து தேர்தல்; அயோத்தி - வாரணாசியில் கடும் சரிவை சந்தித்த பாஜக!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

modi aditynath

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 3,050 கிராம பஞ்சாயத்து இடங்களில் சமாஜ்வாடி கட்சி 760 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாஜகவோ 719 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 381 இடங்களிலும், காங்கிரஸ் 76 இடங்களிலும் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளன. 1,114 இடங்களில் சுயேச்சைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

 

இந்தக் கிராம பஞ்சாயத்து தேர்தலில், அயோத்தி, பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி ஆகிய இடங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வாரணாசியில், மொத்தமுள்ள 40 பஞ்சாயத்து இடங்களில் 8 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.

 

அதேபோல் அயோத்தியில் உள்ள 40 இடங்களில் பாஜக வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 24 இடங்களைப் பிடித்துள்ளது. பகுஜன் சமாஜ் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலும் பாஜக சரிவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜக 6 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. சமாஜ்வாடி அங்கு 10 இடங்களைப் பிடித்துள்ளது. 

 

கிராம பஞ்சாயத்து தேர்தலில், பாஜகவின் பின்னடைவுக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டமும், அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையும் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.