வீட்டில் வேலைப் பார்க்கும் பணிப்பெண் ஒருவர், தனது முதலாளி குடும்பத்தினருக்கு சிறுநீர் கலந்த சாப்பாடு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். இவரது குடும்பத்தினருக்கு, சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. உண்ணும் உணவில் ஏதேனும் இருக்கக்கூடும் என்று எண்ணிய தொழிலதிபர், வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் ரீனா (32) மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், சமையல் அறையில் கேமரா ஒன்றை பொறுத்தி கண்காணித்துள்ளார்.
அந்த கேமராவில் பொறுத்தப்பட்டிருந்த வீடியோவில், பணிப்பெண் ரீனா பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, அதை மாவில் கலக்கி சப்பாத்தி செய்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், இது தொடர்பான வீடியோவை போலீசிடம் கொடுத்து ரீனா மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரீனாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரீனாவின் முதலாளி அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சிறிய தவறுகளுக்கு கூட அடிக்கடி கண்டிப்பதாகவும் கூறிய ரீனா, இதில் ஆத்திரமடைந்த அவர், மாவில் சிறுநீரை பலமுறை கலந்து சப்பாத்தி செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. 8 ஆண்டுகளாக தனது முதலாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறுநீர் கலந்து சப்பாத்தி கொடுத்த பணிப்பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.