விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று தி.மு.க.வின் டி.கே.எஸ். இளங்கோவன் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நிறைவேறிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்தம், விவசாய சேவை சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், "விவசாயிகள் நாடு முழுவதும் தங்களது விளைபொருட்களை விற்க மசோதா வழிவகை செய்கிறது. வேளாண் மசோதாக்களால் குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெறும் கொள்முதலுக்கு பாதிப்பிருக்காது" என்றார்.
மசோதா மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க.வின் டி.கே.எஸ்.இளங்கோவன், "விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது. வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் மசோதாக்கள் இல்லை. வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பெரிய அவமதிப்பாகும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா தேவையில்லாதது. வேளாண் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை. தற்போது இந்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை" என்றார்.
அதைத் தொடர்ந்து மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க.வின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், "வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும்" என்றார்.
இதனிடையே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தினர்.