மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு முன்பு நடந்த பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி மத்தியப் பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்ற நான்கு மணிநேரத்தில் விவசாய கடன் தள்ளுபடிகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஷிவால் கதாரியா என்ற விவசாயிக்கு வெறும் 13 ரூபாய் மட்டும் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கதாரியாவுக்கு ரூ.23,815 விவசாய கடன் இருக்க தள்ளுபடியாக வெறும் ரூ13 மட்டுமே அறிவிக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடிக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து வழங்கிய பின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில் கதாரியாவின் பெயரில் ரு.13 மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் கூறும்போது, '2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு அறிவித்தது. ஆனால் தற்போது என் மொத்த விவசாய கடனான ரூ.23,815 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படாமல் வெறும் 13 ரூபாயை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நான் ஒரு நேர்மையான விவசாயி. என் கடன் தவணைகளை முறையாக செலுத்தியுள்ளேன். மேலும் நான் இந்த கடன் தள்ளுபடி பற்றி கேட்டபோது, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் எனக்கு எந்த கடனும் இல்லை என தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. நான் இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல உள்ளேன்' எனக் கூறினார்.