சொந்த ஊருக்குச் செல்ல அரசுப் பேருந்தை திருடிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பொய்சார் பகுதியில் உள்ள பேருந்துநிலையத்தில், பல்கார் பகுதிக்குச் செல்லும் அரசுப் பேருந்து நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. அந்தப் பேருந்தின் ஓட்டுநர் கதவை முறையாக மூடிவிட்டுச் செல்லாததால், பல்கார் செல்வதற்காக காத்திருந்த சபீர் அலி மன்சூரி (வயது 31) என்பவர் பேருந்தில் சகஜமாக ஏறி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். பேருந்தை இயக்கிய சபீர், சிறிது தூரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நிறுத்தியுள்ளார். பிறகு, அங்கிருந்த பொதுமக்கள் சபீர் அலியைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அரசுப் பேருந்தைத் திருடிய சபீர் அலியைக் காவல்துறையினர் கைது செய்து திருட்டு, அரசு சொத்துக்கு பிரச்சனை விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சபீர் அலி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், சொந்த ஊருக்குச் செல்ல தானே பேருந்து ஓட்ட நினைத்ததால், அப்படி செய்ததாக சபீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பேருந்து கதவை முறையாக மூடிவிட்டுச் செல்லாத ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.