பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். ஆறுபேர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசராணை நடத்திவந்த போலீஸார், பலியான நபர் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹெட் கான்ஸ்டபிள் ககன்தீப் சிங் என்றும், அவரே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் தெரிவித்தனர். மேலும் ககன்தீப் சிங்குக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடனும் பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இருந்ததாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகளும் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் எனவும் பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நீதிமன்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய நீதிக்கான சீக்கியர்கள் (sikhs for justice) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவரான நிறுவனர் குர்பத்வந்த் சிங் பண்ணுவின் நெருங்கிய கூட்டாளியும், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவருமான இவரை, இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்பேரில் ஜெர்மனி அரசு கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உதவியோடு பஞ்சாபிற்குள் ஆயுதங்களை ஜஸ்விந்தர் சிங் முல்தானி அனுப்பி வந்ததாகவும், இந்த ஆயுதங்களின் மூலம் பஞ்சாபில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த அவர் சதி செய்து வந்தததாகவும் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், டெல்லி மற்றும் மும்பையில் தாக்குதல் நடத்த செய்யப்படும் சதியில் ஜஸ்விந்தர் சிங் முல்தானிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளன.
மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய கிசான் யூனியன்- ராஜேவால் அமைப்பின் தலைவரான பல்பீர் சிங் ராஜேவாலை கொல்ல ஜஸ்விந்தர் சிங் முல்தானி சதி செய்து, அதற்காக நிதி அனுப்பியதாவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.