அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுத் தவித்து வரும் சிறுத்தைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் இருந்து இந்து உயிரியல் பூங்காவிற்கு சிறுத்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் உடல் நலிவுற்றுக் காணப்பட்ட சிறுத்தை நடக்க முடியாமல் இருந்தது. அந்தப் பகுதியில் சிறுத்தை நலிவுற்றுக் கிடப்பதை அறிந்து மக்கள் கூட்டம் கூடியது. அவர்கள் சிறுத்தையை எழுந்து நடக்க வைக்க முயன்றனர். ஆனால் இதற்கு முன்னரே கிராமப் பகுதியைச் சேர்ந்த சிலர் சிறுத்தையை சூழ்ந்து கொண்டு அதனைப் புகைப்படம் எடுப்பது, அதன் மீது ஏறி அமர்ந்து கொள்வது, நடக்க வைப்பதாகக் கூறி அதற்குத் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், வனத்துறை அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க அதன் உமிழ்நீர் மாதிரியை மருத்துவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். கிராமப்புற மக்கள் சிலர் சிறுத்தையைப் பூனைக் குட்டி போல் பிடித்து தொந்தரவு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.