Another shocking incident in Manipur

மணிப்பூரில் மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மணிப்பூர் போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இதேபோன்ற ஒரு கொடூரம் சம்பவம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கார் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் பணியாற்றி வந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மைத்தேயி மக்கள் அதிகம் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதில் ஒருவருக்கு 24 வயதும், மற்றவருக்கு 21 வயதுமாகியுள்ளது. இந்த நிலையில் சம்பத்தன்று அவர்களது வீட்டிற்குள் புகுந்த மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த கும்பல் இருவரியும் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உயிரிழந்த இரு சகோதரிகளின் தந்தை கூறுகையில், “கடந்த 4 ஆம் தேதி மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த கும்பலால் எனது மகள்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எனது மூத்த மகளின் தோழி ஒருவர் கூறினார். இதனையறிந்து எனது மகள்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு போலீசாருடன் சென்றேன், அங்கு மருத்துவர்கள் இரு மகள்களும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பதாக மருத்துவர் கூறினார். இது குறித்து போலீசாரிடம் புகாரளித்தேன். ஆனால் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவுமில்லை” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.