18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரவு 11 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதே சமயம் ஆந்திராவில் மொத்தம் 175 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனும், பாஜகவுடனும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தேர்தலை சந்தித்தது.
அதன்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜனசேனா 21 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் சந்திரபாபுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அசாதாரண தீர்ப்பு வழங்கிய ஆந்திரா மாநில மக்களுக்கு நன்றி. இந்த மாபெரும் வெற்றிக்காக சந்திரபாபுவுக்கும், பவன் கல்யானுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஆந்திரா மாநில பாஜகவுக்கும் வாழ்த்துக்கள். ஆந்திர மாநிலத்தின் அனைத்துத்துறை வளர்ச்சிக்காக பாடுபடுவோம், வரும் காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சியைக் காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திர சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபுவுக்கும் வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும். அது மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் வலுவான வெற்றிக்கு தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புத்திசாலித்தனமான தலைமையிலான புதிய அரசாங்கம் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வந்து அதன் மக்களின் இலட்சிய கனவுகளை நிறைவேற்றட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், “ஆந்திரப்பிரதேசத்தை வழிநடத்தும் சட்டமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றி பெற்றதற்காக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபுவுக்கு வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “சட்டசபை தேர்தலில் 2வது பெரிய வெற்றிக்காக வாழ்த்துக்கள் பவன் கல்யான். உங்கள் வல்லமைமிக்க ஜனசேன கட்சி ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய உங்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஆந்திரப் பிரதேச தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநரின் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடு ஜூன் 9 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்த்ரா பவார் பிரி்வு) தலைவர் சரத் பவார் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனச் சந்திரபாபுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.